Saturday, January 22, 2011

காசி ஆனந்தன் நறுக்குகள்

மாவீரன்
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;

மண்
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?

போர்
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

நிழல்
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்

அரண்
என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்

மானம்
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.

ஞானம்
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

முரண்
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே!பன்றியே!குரங்கே!

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

அறுவடை
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது

மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா...நீ என்றேன்
கைதட்டினான்

No comments:

Post a Comment