Monday, February 28, 2011

பிறந்தமண்!

பிறந்த ஊருக்குப்போய்ப்பாருங்கள்
அங்கு வீசும் காற்றும்
காதோரத்தில்
கதைபலபேசும்,
பெண்மனம் போல
ஒருக்கணம் நெகிழும்.

முனைமழுக்கிக்கொண்டு
குத்தாமல் பாதம்தொடவே
முட்களும் காத்திருக்கும்.

வீதிக்கோலங்கள் எல்லாம்நாளின்
பாதிப்போதிலேயே
பொலிவிழந்தாலும்
மீதிக்கோலத்திலும்
மகிழ்ச்சியாகவேமலர்ந்திருக்கும்

பூக்கள் எல்லாம் நமக்காகவே
புதிதாக மணம்வீசும்.

ஊரின் உதயத்தோடு
நம் இதயமும்
ஊரின் அஸ்தமனத்தோடு
அடிமனமும்
ஆனந்தக்கூத்தாடும்.

எதிரில் தெரியும்
எந்தமுகமும்
அறிமுகம் செய்து
நலம் விசாரிக்கும்.

தெருநாய்கூட
தெரிந்தாற்போல
வாலைக்குழைத்து
வாசலுக்கு வந்து நிற்கும்.

சாரிசாரியாய் செல்லும் எறும்புகள்
சின்னத்தீண்டலில்
'என்னநலமா?'
என்று விசாரிக்கும்.

பிறந்ததும் கிடந்த
தாயின் மடிபோல்
பிறந்தமண் ,பாதத்தில்
மெத்தென்றேதான்
பரந்திருக்கும்!

3 comments:

  1. முனைமழுக்கிக்கொண்டு
    குத்தாமல் பாதம்தொடவே
    முட்களும் காத்திருக்கும்


    ரசித்தேன்.........அருமையான வார்த்தை பிரயோகம்!!!!!!

    ReplyDelete
  2. தங்கள் கவிதை எனது http://ksbalas.blogspot.com/2010/09/blog-post.html பதிவினமாக உணர்ந்தேன். கிராமங்களை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்படி எழுத இயலும்
    மகிழ்ச்சி

    ReplyDelete
  3. Please Visit My Blog:
    நண்பேன்டா...

    அரசியல் விபச்சாரம்...
    http://nalamnadi.blogspot.com/2011/03/blog-post_08.html

    ReplyDelete